'நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அரசாணை வெளியீடு'

‘நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அரசாணை வெளியீடு’

Update: 2022-09-14 10:58 GMT

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக தமிழக அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதற்கான முறையான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து திருப்பூர் இயற்கை கழகத்தினர், பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நஞ்சராயன் குளம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இதில் சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் மீன் பிடிப்பு பகுதியாக நீர் நிறைந்து காணப்படுகிறது. திருப்பூர் பனியன் நிறுவனங்களில் சாயக்கழிவுகள் கலந்து குளத்தின் நீர் மாசுபட்டு இருந்தது. இதையடுத்து இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் குளத்தை சீரமைக்க வேண்டுமெனவும் அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் இதனை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழக அரசு 2015-ம் ஆண்டு ரூ.4 கோடியில் நஞ்சராயன் குளத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குலத்தினை சீரமைக்கும் பணிகள் மேற்கொண்டன.

வெளிநாட்டுப் பறவைகள்

நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் குளிர்கால வலசை வந்து செல்கின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை இங்கு தங்கியிருந்து பின்னர் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப செல்லும். பொதுவாக வட துருவத்தில் வாழும் பறவைகள் குளிர்காலத்தில் இரை தேடவும், கடும் குளிரில் இருந்து தப்பிப்பதற்காக மிதவெப்ப நாடுகளான இந்தியா போன்ற துணை கண்டங்களுக்கு வந்து செல்கின்றன. ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் எந்தெந்த பறவைகள் வந்துள்ளன என கண்காணிப்பது நடைமுறை. அவ்வகையில் நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் என இதுவரை 181 பறவை இனங்கள் வந்துள்ளன.

உள்நாட்டு பறவைகளான கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, பழுப்பு நாரை, செந்நீல நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சிறிய கொக்கு, உண்ணி கொக்கு, மடையான், இராக்கொக்கு, சிறிய நீர்காகம், நடுத்தர நீர்காகம், பளபளக்கும் அருவாள் மூக்கன், நீல தாழைக்கோழி, தென்சிட்டு, நெடுங்கால உள்ளான், கானாங்கோழி, புள்ளிமூக்குவாத்து, புள்ளிப்புறா, மாடப்புறா, பட்டைக்கழுத்து புறா போன்ற பறவைகளும் வெளிநாட்டு பறவைகளான தட்டை வாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, கிளுவை போன்ற வாத்துகளும் கடற்பறவைகள் ஆன மண்கொத்தி, சதுப்பு மண்கொத்தி, பொரி மண்கொத்தி, சிறியபட்டாணி, உப்புக்கொத்தி, சிறிய கொசு உள்ளான், பவழக்கால் உள்ளான், பேதை உள்ளான், டெமினிக் கொசு உள்ளான், கருவால் உள்ளான் போன்ற பறவைகள் இதுவரை ஏராளமானவை வந்துள்ளன.

இயற்கை கழக தலைவர்

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறுகையில் "பல வருடங்களாக நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். தற்போது அதற்கான அரசாணை வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதற்கு ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. முதல் கட்டமாக குளம் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்படும். அதனைத்தொடர்ந்து விளக்க கூடம் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு பறவைகளைப்பற்றிய விளக்கப்படங்கள் அமைக்கப்படும். குளத்தினை சுற்றி சுகாதாரமற்ற முறையில் இருக்கும் சூழ்நிலை மாற்றப்பட்டு அனைவரும் வந்து செல்லும் இடமாக மாற்றி அமைக்கப்படும் எனவும் குளத்திற்குள் மணல் திட்டுகள் புல்வெளி திட்டுகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது திருப்பூர் பகுதிக்கு சுற்றுலாத்தலமாக மட்டுமில்லாமல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பறவைகளைப் பற்றி பல்வேறு விஷயங்களை கற்கும் இடமாக மாறும்" என்றார்.

---

Tags:    

மேலும் செய்திகள்