ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றது.

Update: 2023-01-12 19:39 GMT

ஸ்ரீரங்கம்:

வைகுண்ட ஏகாதசி விழா

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளன்று திருக்கைத்தல சேவையும், 8-ம் நாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நம்பெருமாள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நம்மாழ்வார் மோட்சம்

இதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிருநாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார்.

பின்னர் நம்மாழ்வாரை 2 அர்ச்சகர்கள் கொண்டு சென்று, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றிபடும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர்.

இயற்பா பிரபந்தம்

இதையடுத்து பல்வேறு வேதங்களை கூறியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது.

விழா நிறைவு

அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. மேலும் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம் முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி, வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்