ஆதிநாதர் ஆழ்வார் கோவில் வைகாசி அவதார திருவிழாவில் நம்மாழ்வார் மங்களா சாசனம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று வைகாசி அவதார திருவிழாவில் நம்மாழ்வார் மங்களா சாசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-05-28 18:45 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று வைகாசி அவதார திருவிழாவில் நம்மாழ்வார் மங்களா சாசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

வைகாசி அவதார திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி அவதார திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் நம்மாழ்வார் இரவு, காலை நேரங்களில் வீதி உலா வந்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 5-ம் திருநாளான நேற்று நவத்திருப்பதி கோவில்களில் உள்ள பெருமாள்கள், ஆழ்வார்திருநகரிக்கு வந்து அருள் பாலித்தனர். இதில் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் ஆகிய கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள்கள் ஆழ்வார் திருநகரி வந்து சேர்ந்தனர். இதையொட்டி காலை 10 மணி அளவில் பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கருட வாகனத்தில் நவத்திருப்பதி பெருமாள்கள் வீதி உலா வரும் காட்சி நடைபெற்றது.

திரளான பக்தர்கள்

நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிதண்ணீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. பதநீர், இளநீர், நுங்கு போன்ற குளிர்பான கடைகள் பெருவாரியான காணப்பட்டது.

விழாவின் சிகர நாளான 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழாவில் திருக்குறுங்குடி ஜீயர், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பார்த்திபன், ஸ்ரீவைகுண்டம் கோவில் தலத்தார் வெங்கடாச்சாரி உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் திருவிழா உபயதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வசந்த ராஜ் (திருச்செந்தூர்), மாயவன் (ஸ்ரீவைகுண்டம்) மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்