ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும்

ஊராட்சிகளில் செய்யப்படும் பணிகளில் ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-01-19 18:29 GMT

ஒன்றியக்குழு கூட்டம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, ஒன்றியக் குழு துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் உத்தரகுமாரி, பொறியாளர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் அசோக்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

உறுப்பினர் ரஞ்சித் குமார்: அணங்காநல்லூர்- கோப்பம்பட்டி சாலை, செம்பேடு கூட்ரோடு முதல் உள்ளி மேம்பாலம் வரை உள்ள சாலையை சீர் செய்ய வேண்டும், கூத்தம்பாக்கம்- அணங்காநல்லூர் மோட்டூர் இடையேஆற்றில் பைப்புகள் பதித்து தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்.

அங்கன்வாடி கட்டிடம்

இமகிரிபாபு: செம்மேடு- ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து மாதம் 5 லட்சம் ரூபாய்க்கு பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை வாங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை அந்த ஊராட்சிகளின் நிதியில் வாங்க வேண்டும்.

சுரேஷ்குமார்: இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தட்டப்பாறையில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும். முக்குன்றம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. அங்கு உடனடியாக கட்டிடம் கட்டவேண்டும். அங்கன்வாடி கட்டிடம் இடிக்கப்பட்டதால் குழந்தைகள் மரத்தடியில் உட்கார்ந்துள்ளர். மாணவர்களை தேனீக்கள் கொட்டியதால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூரியகலா: எங்கள் பகுதிக்கு ஒன்றியக் குழு தலைவர் ஆய்வுக்கு வரும்போது கவுன்சிலர்களை அழைக்க வேண்டும்.

பிரியா: வளத்தூர் ஊராட்சியில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என பலமுறை மன்றத்தில் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. உடனடியாக கிணற்றை மூட நடவடிக்கை வேண்டும்.

சரவணன்: எங்கள் பகுதியில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தடுப்பூசி போட்டனர். இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெயர் இடம்பெற வேண்டும்

கவுரப்பன்: சேங்குன்றம் பகுதியில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் பலருக்கு முதியோர் ஓய்வூதியம் வருவதற்கான ஆணை வழங்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வரவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபிகாபரத்: சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது தேசிய கொடியை ஏற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு அனுமதி உண்டா, ஊராட்சிகளில் செய்யப்படும் பணிகளில் ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

தலைவர் பதில்

உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வளத்தூர் ஊராட்சியில் அந்த கிணறை மூட கலெக்டருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பி உள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதிதிராவிடர் நல பள்ளிகள் ஆதிராவிட நலத்துறையின் கீழ் வருகிறது. அப்பள்ளி கட்டிடங்கள் கட்ட அந்தத்துறைக்கு கடிதங்கள் அனுப்பப்படும். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடியை அந்த அந்த ஊராட்சி மன்ற தலைவர் ஏற்றுவார்கள்.

பள்ளிகள் மற்ற பகுதிகளில் ஒன்றியக் குழு உறுப்பினரும், ஊராட்சி மன்ற தலைவரும் ஏற்றலாம். ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளில் முடிவு பெற்ற பின் வைக்கப்படும் பெயர் பலகைகளில் அந்தந்தப்பகுதி ஒன்றியக் குழு உறுப்பினர் பெயர் இடம்பெற அதிகாரிகள் மூலாமாக அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்