நாமக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-10 18:45 GMT

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் மத்திய கிராம சுகாதார செவிலியர்கள் மீதான பணிச்சுமையை அதிகரிக்கும் யு.வின் என்கிற ஆன்லைன் செயலியை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சவுந்தரம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வைரம், மாவட்ட பொருளாளர் ஜெனிதா, பொதுச் செயலாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு டேட்டா ஆபரேட்டரை நியமனம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும். சேதமடைந்த துணை சுகாதார நிலைய கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தகுதியற்ற குடியிருப்புகள்

மேலும் அரசாணை எண் 3-ன் படி 5 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேடு 2 மற்றும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கிரேடு 1 ஆகவும் ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டப் பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வட்டார அளவில் ஒரு பகுதி சுகாதார செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பதவிகளை ஏற்படுத்தி சுகாதார செவிலியர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல் குடி இருக்கவே தகுதியற்ற நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு செவிலியர்களிடம் வாடகை பிடித்தம் செய்யப்படுவதாகவும், அதை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் ராதாமணி, சரோஜா, இணைச் செயலாளர்கள் லலிதா, மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்