வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைக்க வேண்டும்; கலெக்டர் பேச்சு

வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைக்க ேவண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

Update: 2023-03-18 17:42 GMT

வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைக்க ேவண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி என சட்டம் இயற்றப்பட்டு, தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் பலகையை தமிழில் அமைக்க வேண்டுமென அரசு ஆணையிட்டு 66 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்றைக்கும் பல நிறுவனங்கள் பெயர் பலகைகள் பலவும் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது.

தமிழில் பெயர் பலகைகள் இருந்தால் மட்டுமே அதிகமானோர் படித்து தெரிந்துகொள்ள முடியும். எத்தனை மொழிகள் தெரிந்துகொண்டாலும், தமிழ்நாட்டை பொருத்தவரையில் தமிழ்மொழியில் தான் இருக்க வேண்டும்.

தமிழ் மொழியில்...

மிகவும் பழமை வாய்ந்த மொழியாக தமிழ்மொழி இருக்கின்றன. ஒவ்வொரு மொழிகளும் வடிவங்கள் மாறிகொண்டே இருக்கும். ஆனால் மொழி மாறாது. உலகில் 23 மொழிகளுக்கு தாய் தமிழ் மொழியாக இருக்கின்றன.

மேலும் திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் தமிழில் இருந்து பிரிந்த மொழிகளாகும். நம் குழந்தைகளுக்கு தமிழை நன்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நீங்கள் அனைவரும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழ் மொழியில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் நாகராசன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீனாட்சி, கண்காணிப்பு அலுவலர் சுகன்யா, வணிகர் சங்க பேரமைப்பின் மண்டல தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன் மற்றும் வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆட்சி தமிழில் அமையட்டும் என்கிற ஒட்டுவில்லைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டின் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்