நாமக்கல் டாஸ்மாக் நிறுவனத்தில் போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி

நாமக்கல் டாஸ்மாக் நிறுவனத்தில் போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2023-08-06 18:45 GMT

போலி ஒப்பந்த பத்திரம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள அவினாசிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர், மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானகடைகளுக்கு டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் இருந்து, லாரிகள் மூலம் மதுபாட்டில்களை கொண்டு செல்லும் ஒப்பந்தம் எடுத்து இருந்தார்.

இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான வாடகையை டாஸ்மாக் நிறுவனம் இவருக்கு தரவில்லை. இது குறித்து அவர் சேலத்தில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட போது, போலி ஒப்பந்த பத்திரத்தை சிலர் கொடுத்திருந்தது தெரியவந்தது.

போலீசில் புகார்

இது குறித்து கணேசன் மகன் ஜெகதீஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து இருந்தார். அதில், நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் நிறுவனம் மதுபாட்டில்களை சப்ளை செய்ய, எனது தந்தை கணேசனுக்கு ஜெயலட்சுமி டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் ஒப்பந்தம் அளித்து இருந்தது. மதுபாட்டில்களை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதில் லாரி போக்குவரத்து வாடகை ரூ.51 லட்சம் டாஸ்மாக் அலுவலகத்தில் நிலுவையில் இருக்கிறது.

ஆனால் திருச்செங்கோட்டை சேர்ந்த பழனியப்பன், ஈஸ்வரன், ஜெகதீசன், மாதேஸ்வரன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து, எனது தந்தையின் கையெழுத்தை போலியாக போட்டு கூட்டு ஒப்பந்தபத்திரம் தயாரித்து டாஸ்மாக் அலுவலகத்தில் கொடுத்து உள்ளனர். இந்த ஒப்பந்தபத்திரம் கடலூர் மாவட்டத்தில் வாங்கப்பட்டு உள்ளதும், கூட்டு ஒப்பந்த பத்திரத்தில் போடப்பட்டு உள்ள எனது தந்தையின் கையெழுத்து போலியானது என்பதும் நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது. எனவே போலி ஒப்பந்தபத்திரம் தயாரித்து, போலி கையெழுத்திட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி இருந்தார்.

4 பேர் மீது வழக்குப்பதிவு

அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், பழனியப்பன், ஈஸ்வரன், ஜெகதீசன், மாதேஸ்வரன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்