தமிழக அரசின் திட்டங்கள்பயனாளிகளை சென்றடைய அலுவலர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு
தமிழக அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும் என நாமக்கல்லில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பேசினார்.
ஆய்வுக்கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை குழு, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வளர்ச்சி திட்டப்பணிகள்
மேலும் சமத்துவபுரம் சீரமைப்பு பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
அதேபோல் வருவாய் துறையில் பட்டா மாறுதல் கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி உட்கட்டமைப்பு பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
கள ஆய்வு
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பேசியதாவது:-
அரசின் திட்டங்களின் நோக்கம் முழுமை அடையும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து அவற்றைக் கண்காணிக்க வேண்டும். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முழுமை திட்ட இயக்குனர் சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, கவுசல்யா, சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.