திருச்செங்கோட்டில் 2 இடங்களில் 2-ம் நிலை காவலர் பணிகளுக்கான எழுத்து தேர்வு 8,766 பேர் எழுதினர்
எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள 2 இடங்களில் 2-ம் நிலை காவலர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வை 8,766 பேர் எழுதினர்.
தீவிர சோதனை
தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை ஆண் மற்றும் பெண் போலீசார், தீயணைப்பு மற்றும் சிறை காப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதன்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள 2 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வு எழுதுவதற்காக காலை 8 மணிக்கு முன்னரே தேர்வர்கள் அந்தந்த மையங்களுக்கு வந்தனர். அவர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர்.
3,066 தேர்வு எழுதவில்லை
இந்த தேர்வை எழுத நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 8 ஆயிரம் பேர் விவேகானந்தா கல்லூரியிலும், 3,832 பேர் கே.எஸ்.ஆர். கல்லூரியிலும் என மொத்தம் 11,832 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3,066 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது. இதையடுத்து நடந்த தேர்வை நாமக்கல் மாவட்டத்தில் 8,766 பேர் பங்கேற்று எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. தேர்வையொட்டி திருச்செங்கோட்டில் உள்ள தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.