சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 1,000 மாணவர்கள் 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை நாமக்கல்லில் நடந்தது
சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 1,000 மாணவர்கள் 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை நாமக்கல்லில் நடந்தது
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சிகள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நாமக்கல்லில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, சிலம்பம் பயிற்சி பெற்ற, 1,000 மாணவ, மாணவிகள் இடைவிடாமல் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
சிலம்பம் கலையை மீட்டெடுக்கும் வகையில் இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சகத்தின் நேரு யுவ கேந்திரா, சிலம்பம் தமிழ்நாடு சங்கம், நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை சார்பில் இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 1,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர். சிலம்ப ஆசான்களின் கட்டளைக்கு ஏற்ப பல்வேறு விதமான சிலம்ப ஆட்டங்களை அவர்கள் வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து ஒரு மணி நேரம் இடைவெளி இன்றி பல்வேறு சிலம்ப கலைகளை போட்டியாளர்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியது சாதனையாக கருதப்படுகிறது. இறுதியாக இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி பள்ளி தலைவர் டாக்டர் எழில்செல்வன், மாவட்ட நேரு யுவகேந்திரா ஆலோசனை குழு உறுப்பினர் தில்லை சிவக்குமார், சிலம்பம் தமிழ்நாடு சங்கத்தின் மாநில பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.