குலசேகரம்:
குலசேகரம் அருகே செருப்பாலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உபயதாரர்கள் சார்பில் மாணவர் கள் கை கழுவும் பகுதியில் குழாய்களில் 6 ஸ்டீல் நல்லிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலையில் பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வந்தனர். அப்போது மாணவிகள் கைகழுவும் இடத்தில் குழாயில் பொருத்தப்பட்டிருந்த 6 நல்லிகள் மற்றும் கழிவறையில் தண்ணீர் திறக்கும் வால்வும் மாயமாகி இருந்தது. தொடர் விடுமுறையை பயன்படுத்தி மர்ம நபர் பள்ளிக்குள் புகுந்து அவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்தன் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோல் குழாய் நல்லிகள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.