விடுதலை கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி
பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை என்று கூறி, கவர்னர் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக் கோரிய நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.;
சென்னை,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்துக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தார்.
அதையடுத்து, கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலதாமதம் செய்வது சட்டவிரோதம் என்றும் சென்னை ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார். அதேபோல, ரவிச்சந்திரனும் தன்னை விடுதலை செய்யக் கோரி வழக்கு தாக்கல் செய்தார்.
தீர்ப்பு
இந்த வழக்குகளை எல்லாம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 6-ந் தேதி உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வுகள் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே கோரிக்கையுடன் நளினி மீண்டும் தொடர்ந்துள்ள இந்த வழக்கை ஏற்க முடியாது.
ஜனாதிபதியின் கையெழுத்து
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் தன் வாதத்தில், அமைச்சரவை தீர்மானம் கவர்னர் முன் நிலுவையில் இருந்தபோதும், தற்போது ஜனாதிபதி முன்பு இருக்கும்போதும், தீர்மானத்தின்படி மனுதாரர்களை விடுதலை செய்ய இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டால், அது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அப்பால் சென்றுவிடும். விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் இயற்றினால், அதற்கு ஒப்புதல் அளித்து கவர்னர் அல்லது ஜனாதிபதியின் கையெழுத்து அவசியம். இவர்களது கையெழுத்து இல்லாமல் தமிழ்நாடு அரசால் மனுதாரர்களை விடுதலை செய்ய முடியாது என்று வாதிட்டார்.
அப்பாவி மக்கள்
மேலும், ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் மனுதாரர்களை விடுதலை செய்ய இந்த ஐகோர்ட்டும் உத்தரவிடக் கூடாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி முக்கிய குற்றவாளி ஆவார். இதில் ராஜீவ் காந்தி மட்டும் இறக்கவில்லை, போலீஸ்துறையினர், அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
அதனால், கவர்னருக்கு அமைச்சரவை தீர்மானத்தை அனுப்பியதன் மூலம், அவரது ஒப்புதல் இல்லாமலேயே நளினியை அரசே விடுதலை செய்யலாம் என கூற முடியாது. கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
சிறப்பு அதிகாரம்
எனவே, அமைச்சரவை தீர்மானத்தின்படி மனுதாரர்களை விடுதலை செய்ய முடியாது. பேரறிவாளனை விடுதலை செய்ய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 142-ன்படி சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அந்த அதிகாரம் ஐகோர்ட்டு இல்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதேபோல ரவிச்சந்திரன் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
ஏமாற்றம்
தீர்ப்பு குறித்து நளினியின் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'இந்த தீர்ப்பு எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏற்கனவே இந்த கோரிக்கையுடன் ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்து தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு என கூறி இந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் கவர்னரின் நடவடிக்கை சட்டவிரோதம் என்றுதான் கூறியுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை என்று கூறியிருப்பது தவறு. ஐகோர்ட்டுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்' என்று அவர் கூறினார்.