நிர்வாண நிலையில் தோட்டத்தில் ஆண் பிணம்
சூலூர் அருகே நிர்வாண நிலையில் தோட்டத்தில் ஆண் பிணம் கிடந்தது. கொலை செய்து வீசிச்சென்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
சூலூர் அருகே நிர்வாண நிலையில் தோட்டத்தில் ஆண் பிணம் கிடந்தது. கொலை செய்து வீசிச்சென்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிர்வாண நிலையில் பிணம்
கோவை சூலூர் அருகே பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது தோட்டத்தின் கம்பிவேலி பகுதி அருகே ஆண் பிணம் ஒன்று நிர்வாண நிலையில் கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியான அவர்கள், உடனடியாக சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நிர்வாண நிலையில் கிடந்த பிணத்தை பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவருக்கு 35 வயது இருக்கும் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர், பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மதுபோதையில் யாராவது அடித்து கொன்று பிணத்தை வீசி சென்றனரா? என்பன போன்ற பல கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அந்த பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டது. இறந்து கிடந்தவர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார்? என்று அடுத்த கட்ட விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.