நாகூர்-கொல்லம் ரெயிலை மீண்டும் திருவாரூர், மதுரை வழியாக இயக்க வேண்டும்

மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட நாகூர்-கொல்லம் ரெயிலை மீண்டும் திருவாரூர், மதுரை வழியாக இயக்க வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன.

Update: 2023-03-16 18:45 GMT


மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட நாகூர்-கொல்லம் ரெயிலை மீண்டும் திருவாரூர், மதுரை வழியாக இயக்க வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன.

திருவாரூர் ரெயில் நிலையம்

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் தலைவர் தனிக்காசலம், செயலாளர் பாஸ்கரன் மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் நீளமான ரெயில் நிலையமாகும். திருவாரூர் வழியாக ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் ரெயில் மட்டும் சென்று வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது.

இந்த ரெயில் நிலையத்தை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர், திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு செல்லவேண்டுமானால் திருவாரூரை கடந்து தான் செல்லவேண்டும்.

நேரம் மற்றும் விலைகுறைவு

திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள் உள்ள, பெரும்பாலானோர், நேரம் மற்றும் விலை குறைவு ஆகிய காரணங்களால் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். திருவாரூர் ரெயில் நிலையம் வழியாக சென்று வரும் ரெயில்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு தேவைகளுக்காக திருவாரூர் ரெயில் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதை பல கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய கேட் கீப்பர்கள் இல்லாததால் அந்த வழியாக போதிய ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது.

உடனே கேட் கீப்பர்கள் நியமனம் செய்து இந்த பாதையில் கூடுதல் ரெயில்கள் இயக்குவதோடு, அறிவிப்புடன் நிறுத்தப்பட்டுள்ள தாம்பரத்தில் இருந்து திருவாரூர், காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு வாரம் 3 முறை ரெயில் இயக்க வேண்டும். செகந்திராபாத் ரெயிலை வாரம் ஒரு முறை இயக்குவதற்கு பதில், 2 முறை இயக்க வேண்டும்.

நாகூர்-கொல்லம் ரெயில்

மேலும் மேற்கண்ட 2 ரெயில்களையும் பேரளம், முத்துப்பேட்டை ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வாரந்தோறும் இயக்கப்படும் வேளாங்கண்ணி- எர்ணாக்குளம் ரெயிலை வாரத்திற்கு 3 முறை இயக்கவேண்டும். திருவாரூர் மற்றும் திருவாரூர், காரைக்குடி வழியாக மதுரைக்கு ரெயில்கள் இயக்கப்படுவதில்லை.

எனவே திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர், காரைக்குடி வழியாக மதுரைக்கு ரெயில்கள் இயக்கவேண்டும். விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரெயில்களை திருத்துறைப்பூண்டி வரை இயக்கவேண்டும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்த நாகூரில் இருந்து திருவாரூர், மதுரை வழியாக கொல்லம் வரை சென்ற ரெயிலை மீண்டும் இயக்கவேண்டும்.

முதன்மை பணிமனை

மேலும் நீண்ட நாட்கள் கோரிக்கையான அதிகாலை நேரத்தில் காரைக்கால் அல்லது வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர், தஞ்சை வழியாக மதுரைக்கு ரெயில் இயக்கவேண்டும். காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு ரெயில்கள் இயக்குவதுபோல், காரைக்குடியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு ரெயில்கள் இயக்கவேண்டும்.

திருவாரூர் வழியாக நாள் ஒன்றுக்கு 32 ரெயில்கள் இயக்கப்பட்டாலும், சென்னையில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவது போல் திருவாரூரில் இருந்தும் திருவாரூர் வழியாகவும் மற்ற ஊர்களுக்கு போதிய அளவு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.

திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் அனைத்து ரெயில்களுக்கும் உள்ள முதன்மை பணிமனை போல் திருவாரூரிலும் இடவசதி, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி முதன்மை பணிமனைகளை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்