நாகர்கோவில்,
நாகர்கோவில் பேக்கரி குடோனில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு எடுத்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
வாலிபர் தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் மேல குடுமளூர் பகுதியை சேர்ந்தவர் சமய கருப்பன். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 27). இவர் நாகர்கோவில் வட்டவிளை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். இதற்காக அவர் பேக்கரியில் உள்ள குடோனில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு பேக்கரி குடோனுக்கு சென்ற கருப்பசாமி வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவருடன் வேலை செய்யும் மற்ற ஊழியர்கள் குடோனுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கருப்பசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
அதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் குடோனில் ஆய்வு செய்தபோது, அங்கு கருப்பசாமியின் செல்போன் உடைந்த நிலையில் கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கருப்பசாமி ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவருடன் ஏற்பட்ட தகராறில் செல்போனில் மிக கோபமாக பேசிவிட்டு செல்போனை உடைத்து விட்டு தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்ற விவரம் தெரியவந்ததாக போலீசார் கூறினார்கள்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியுடன் ஏற்பட்ட தகராறில் கருப்பசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் உண்டா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.