நகர பரிபாலன சபை உருவான நாள்: ஈரோட்டுக்கு இன்று 151-வது பிறந்ததினம்

ஈரோடு நகர பரிபாலன சபை உருவான செப்டம்பர் 16-ந் தேதியை ஈரோடு தினமாக இன்று (சனிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடுவோம்.

Update: 2023-09-15 21:20 GMT

ஈரோடு நகர பரிபாலன சபை உருவான செப்டம்பர் 16-ந் தேதியை ஈரோடு தினமாக இன்று (சனிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடுவோம்.

ஈரோடு

1000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்பு மிக்கது ஈரோடு மாநகரம். பிரம்மாவின் தலையை காளி உடைத்தபோது ஈர ஓடு விழுந்த இடம் ஈரோடு என்று தலப்புராணம் கூறுகிறது. ஆருத்ர கபாலீசுவரர் கோவில் கொண்டு இருப்பதால் இது ஈரோடு என்றும் புராணங்கள் கூறுகின்றன.

பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஆகிய 2 ஓடைகளின் நடுவே அமைந்த ஈரோடை என்பதை மருவி ஈரோடு ஆனதாகவும் காரணப்பெயர் கூறப்படுகிறது. பண்டைய ஈரோடு கோட்டை, பேட்டை என்று 2 பகுதிகளை மட்டுமே கொண்டு இருந்தது. ஈரோட்டின் நடுநாயகமாக இருந்த மணிக்கூண்டின் கிழக்கு பகுதி பேட்டை என்றும், மேற்கு பகுதி கோட்டை என்றும் அழைக்கப்பட்டது.

கோட்டை பகுதியில் மிகப்பெரிய மண்கோட்டை இருந்தது. இது குறித்து 7-11-1800 அன்று ஈரோடு வந்த ஆங்கிலேய அதிகாரி பிரான்சிஸ் புக்கானன் தனது குறிப்பில் பதிவு செய்து உள்ளார். கோட்டை 1878-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் போது இடிக்கப்பட்டது. கோட்டையை சுற்றி இருந்த அகழிகளில் கோட்டை மண் கொட்டப்பட்டது. மூடப்பட்ட அகழி பகுதிதான் தற்போதைய அகில்மேடு வீதியாகும்.

நகர பரிபாலன சபை

பழைய ஈரோடு பூந்துறை நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் பெருந்துறை தாலுகாவின் கீழ் கிராமமாகவும் இயங்கியது. கிராமமாக இருந்த ஈரோடு திடீர் வளர்ச்சி பெற்றது. இந்த நிலைகள் எல்லாம் கடந்து கி.பி.1871-ம் ஆண்டு ஈரோடு நகரம் தனித்துவம் பெற்றது. ஈரோடு நகர பரிபாலன சபை 16-9-1871 அன்று அமைக்கப்பட்டது. இந்த நாள்தான் ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு விதை நடப்பட்ட நாள். நகர பரிபாலன சபையின் முதல் தலைவராக ஏ.எம்.மெக்ரிக்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருடன் 7 நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

பின்னர் பல்வேறு தலைவர்கள் ஈரோடு நகரின் வளர்ச்சிக்கு உரமூட்டினார்கள். 1904-ம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகள் அந்தோணி வாட்சன் பிரப் ஈரோடு நகர பரிபாலன சபை தலைவராக இருந்தபோது, மாட்டு வண்டி பாதைகளாக இருந்த ஈரோட்டின் முக்கிய சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்ட பெரிய ரோடுகளாக மாற்றப்பட்டன.

தந்தை பெரியார்

ஈரோடு நகருக்கு மாநகராட்சி என்ற கனவை விதைத்தவர் தந்தை பெரியார். அவர் 3 ஆண்டுகள் (1917 முதல் 1920) ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டையும், வீரப்பன்சத்திரத்தையும் இணைத்து மாநகரமாக்கவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அவரது கனவை 90 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நனவாக்கினார். 2009-ம் ஆண்டு முதல் ஈரோடு மாநகரமாக உள்ளது.

தற்போதைய ஈரோடு மாநகரம் 110 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது.

ஈரோடு தினம்

இப்படி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த ஈரோடு மாநகரின் நகர பரிபாலன சபை உருவாக்கப்பட்ட செப்டம்பர் 16-ந் தேதியை ஈரோடு தினமாக கொண்டாட வேண்டும் என்பது மறைந்த கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசுவின் ஆசையாகும். அவரது வேண்டுகோளின்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ந் தேதியை சமூக அமைப்பினர் ஈரோடு தினமாக உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அண்ணா பிறந்த செப்டம்பர் 15-ந் தேதி, தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதி ஆகிய சிறப்பு மிகுந்த 2 நாட்களின் இடைப்பட்ட செப்டம்பர் 16-ந் தேதி ஈரோடு தினம் கொண்டாடப்படுவது சிறப்புக்கு உரியதாகும். ஈரோடு நகரம் பிறந்து 151 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று (சனிக்கிழமை) 152-வது ஆண்டினை உற்சாகமாக கொண்டாடுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்