நாகை, வேதாரண்யம் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

மகாளய அமாவாசையையொட்டி நாகை, வேதாரண்யம் கடற்கரையில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-09-25 18:45 GMT

வெளிப்பாளையம்:

மகாளய அமாவாசையையொட்டி நாகை, வேதாரண்யம் கடற்கரையில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

மகாளய அமாவாசை

அனைத்து தமிழ் மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதங்களில் வரக்கூடிய தை அமாவாசை, ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.இந்த அமாவாசைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அந்தவகையில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நாகை புதிய கடற்கரையில் குவிந்தனர்.

தர்ப்பணம்

பின்னர் அவர்கள் கடலில் புனிதநீராடி கடற்கரையில் வாழை இலையில் பச்சரிசி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பூ, காய்கறிகள், சூடம், ஊதுபத்தி போன்ற பொருட்களை படையலிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல காமேஸ்வரம், காவிரி கிளை ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களை நினைத்து படையலிட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 2 ஆண்டுகளாக நாகை கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்ததால் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட கடற்கரை பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

வேதாரண்யம்

இதேபோல வேதாரண்யம் கோடியக்கரையில் மகாளய அமாவாசையை யொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.மேலும் வேதாரண்யம் சன்னதி பகுதியிலும், ஆதி சேது கடல் பகுதியில் பக்தர்கள் புனித நீராடி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் வேதாரண்யம் போலீசார் ஈடுபட்டனர்.

வாய்மேடு

மகாளய அமாவாசையையொட்டி தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதேபோல தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் பக்த வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திட்டச்சேரி

திருமருகலில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவிலில் அமாவாசையையொட்டி வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்