மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். மேலும் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் பறித்து சென்றனர்.

Update: 2023-02-16 19:15 GMT

தாக்கப்பட்ட மீனவர்கள். 

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். மேலும் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் பறித்து சென்றனர்.

நாகை மீனவர்கள்

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 45). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி(45), சந்துரு(21), மாதேஷ்(22), சிவபாலன்(20), ஆகாஷ்(22) ஆகிய 6 மீனவர்கள் கடந்த 14-ந் தேதி நம்பியார் நகரில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்

அப்போது இலங்கையில் இருந்து 3 பைபர் படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் 12 பேர் அங்கு வந்து, தமிழக மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள், தங்களுடைய கையில் வைத்திருந்த இரும்பு பைப், பட்டாக்கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் தமிழக மீனவர்களின் படகில் ஏறி சரமாரியாக தாக்கினர். இந்த கொலைவெறி தாக்குதலில் மீனவர் முருகனின் இடது கையின் 3 விரல்களில் வெட்டுப்பட்டு விரல்கள் தொங்கின.

ரூ.5 லட்சம் பொருட்களை பறித்து சென்றனர்

இந்த நிலையில் படகில் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள், தூண்டில் வலைகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் கடற்கொள்ளையர்கள் மீனவர்களிடம் இருந்து பறித்து சென்றனர்.அதனை தொடர்ந்து சக மீனவர்களின் உதவியோடு நாகை மீனவர்கள் புஷ்பவனம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.

கதறி அழுத உறவினர்கள்

கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட மீனவர்களுக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காயம் அடைந்த மீனவர்களின் உறவினர்கள் நள்ளிரவில் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து மீனவர்களை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

மீனவர்கள் வேதனை

இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் விரல்கள் வெட்டுப்பட்ட மீனவர் முருகன், நாகையில் இருந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நரம்பியல் சிறப்பு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மீதமுள்ள 5 மீனவர்கள் நாகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காயமடைந்த மீனவர்கள் கூறும்போது,

'இந்திய எல்லையில் நாங்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்களுடைய படகில் ஏறினார்கள். இதை எதிர்த்து கேட்டதால் ஆயுதங்களை கொண்டு எங்களை கடுமையாக தாக்கினார்கள்' என்று வேதனையுடன் தெரிவித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது நாகை மீனவர்களை சரமாரியாக தாக்கி, வலை உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்