நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நாகை,
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அப்போது நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அலுவலகத்தின் மூன்று தளங்களிலும் பணியாற்றிக் கொண்ருந்த அலுவலர்கள் உடனடியாக வெளியேறினர்.
தீ விபத்தால் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து தொடர்பாக நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தீ விபத்தில் லேப்டாப், கணினி, பழுதான ஆதார் கருவி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
தீ விபத்துக்குக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்வபத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.