நாகை மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

நாகை மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

Update: 2022-11-23 18:45 GMT

15 நாட்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

கடல் சீற்றம்

தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதையடுத்து கடந்த 7- ந்தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடல் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆழ்கடல் சென்ற மீனவர்களும் திரும்பி வரவும் மீன்வளத்துறை அறிவித்தது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் 600 விசைப்படகுகள், 3,500 பைபர் படகுகள் கடந்த 8-ந் தேதி முதல் ஆழ்கடல் செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.

ரூ.45 கோடி வர்த்தகம் பாதிப்பு

தொடர்ந்து வானிலை மாற்றத்தின் காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டது. மீன்வளத்துறையினர் எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை 15 நாட்களுக்கு நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகையில் நாளொன்றுக்கு ரூ.3 கோடி மீன் வர்த்தகம் நடக்கும். ஆனால் 15 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ரூ.45 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் மீன்பிடி சார்ந்த பிற தொழிலாளர்களும் என 50 ஆயிரம் பேர் வேலையிழந்தனர்.

கடலுக்கு சென்றனர்

இதையடுத்து வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டதால் மீன்வளத்துறை உத்தரவின் பேரில் நேற்று அதிகாலை முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்