கிருஷ்ணகிரியில் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம்
கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளை பெற்று தராமல் காலம் தாழ்த்தி வருவதாக மத்திய அரசையும், தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டவில்லை எனக்கூறி தமிழக அரசை கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்தை அவர்கள் திடீரென சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார், உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தி சிறைபிடிக்கப்பட்ட பேருந்தை மீட்டு அனுப்பி வைத்தனர். பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது.