விவசாயி கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு
உத்தமபாளையம் அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில் துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்து வருகிறது.
உத்தமபாளையம் அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி யுவராஜ் (வயது 30). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை அரிவாளால் வெட்டியும், மோட்டார் சைக்கிளை தலையில் தூக்கி போட்டும் மர்ம நபர்கள் கொலை செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க, ராயப்பன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சம்பவத்தன்று யுவராஜிடம் செல்போனில் பேசிய நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதன்படி அடிப்படையில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் இந்த வழக்கில் துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.