கொட்டகையில் புகுந்து மாடுகளை திருடிய மர்ம நபர்கள்
கொட்டகையில் புகுந்து மாடுகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்
கொட்டகையில் புகுந்து மாடுகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). விவசாயி. இவருக்கு பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டம்மா சாவடி பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இங்கு மாட்டுக் கொட்டகை கட்டி மூன்று பசுமாடுகளை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற அவர் மாலையில் மாடுகளுடன் திரும்பினார். இரவில் வழக்கம்போல் மாடுகளை கொட்டகையில் கட்டினார்.
பின்னர் மூன்று மாடுகளுக்கும் தீவனம் போட்டு விட்டு, இரும்பு கதவினை பூட்டிவிட்டு தூங்க சென்றார்.
நேற்று காலை கொட்டகைக்கு சென்றபோது அங்கு பூட்டப்பட்டிருந்த இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கட்டப்பட்டிருந்த 3 மாடுகளும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் பல்வேறு இடங்களில் மாடுகளை தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆறுமுகம் நேற்று காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.