தாம்பரத்தில் 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண் போலீசில் சரண்

தாம்பரத்தில் 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண் போலீசில் சரணடைந்தார்.;

Update: 2023-10-08 07:18 GMT

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவருக்கும் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி (22) என்பவருக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி திருமணம் ஆனது. பெண் வீட்டார் ஆர்த்திக்கு 80 பவுன் நகை போட்டதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகும்போதே ஆர்த்தி சேலையூரில் உள்ள உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் படித்து வந்தார். கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டணம் செலுத்தாததால் கல்லூரியில் கடிதம் எழுதி கேட்டிருக்கிறார்கள் எனவே நான் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுவதாக கணவர் விக்னேஷிடம் கூறி கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து சென்றார். பின்னர் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் 80 பவுன் நகையுடன் ஆர்த்தி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் புதுமணப்பெண் ஆர்த்தி வக்கீலுடன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணையில் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. பெற்றோர் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பிறகும் கணவருடன் வாழ பிடிக்கவில்லை அதனால் நான் வீட்டை விட்டு சென்று விட்டேன் என கூறினார். பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை, கணவருடன் செல்லவும் விரும்பவில்லை நான் தனியாக வாழ்ந்து கொள்கிறேன் என எழுதி கொடுத்து விட்டு போலீஸ் நிலையத்திலிருந்து கிளம்பி சென்றார்.

அவர் அணிந்திருந்த நகைகளை தாயாரிடம் ஒப்படைத்து விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்