மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு
குன்னம் அருகே மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டான்.;
சிறுவன் மாயம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இளமுகை (வயது 24). இவர்களுடைய மகன் ஆகாஷ் (1). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் சிங்கப்பூர் சென்றார்.
நேற்று காலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஆகாஷ் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த இளமுகை தனது மகனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்து உள்ளார். ஆனால் அவன் கிடைக்காததால் குன்னம் போலீஸ் நிலையத்தில் தனது குழந்தையை யாரேனும் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் அளித்தார். அதன்பேரில் குன்னம் போலீசார் வரகூர் மற்றும் குன்னம் பகுதிகளில் தேடிப்பார்த்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து ஆய்வு செய்தனர்.
பிணமாக மீட்பு
இதையடுத்து, குன்னம் போலீசார் இளமுகை வீட்டின் அருகே தேடிப்பார்த்தனர். அப்போது வீட்டின் பின்பகுதியில் ஏரி (உப்பேரி) இருப்பதால் அதில் சிறுவன் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏரியில் இறங்கி தேடினர். அப்போது சிறுவன் ஆகாஷ் முழங்கால் அளவு தண்ணீரில் இறந்து பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைதொடர்ந்து சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.