நகைக்கடை அதிபர் காரை மறித்த மர்ம ஆசாமிகள்; காரை நிறுத்தாததால் கல் வீசி கண்ணாடி உடைப்பு

ஆர்.கே.பேட்டை அருகே நகைக்கடை அதிபர் காரை மர்ம ஆசாமிகள் வழிமறித்தனர். காரை நிறுத்தாததால் கல் வீசி கண்ணாடியை உடைத்தனர்.

Update: 2022-12-08 12:53 GMT

நகைக்கடை அதிபர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அனுமன் குமார் (வயது 37). இவர் அந்த ஊரில் நகை கடை நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி சென்னைக்கு சென்று புதிய மாடல் நகைகளை வாங்கி வருவது வழக்கம். இவர் நேற்று முன்தினம் காலை காரை திருத்தணியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து ரெயிலில் சென்னைக்கு சென்ற இவர் தனது வேலையை முடித்துக் கொண்டு மாலையில் திருத்தணிக்கு ரெயிலில் வந்து இறங்கினார். அதன்பிறகு அவர் தனது காரை எடுத்துக் கொண்டு தனது கிராமத்திற்கு புறப்பட்டார். வழியில் தனக்கு டிபன் வாங்குவதற்காக காரை ஹோட்டலின் முன்புறம் நிறுத்தி விட்டு தனக்கு தேவையான டிபனை வாங்கிக் கொண்டு காரில் ஏற வந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் காரை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. தனது காரில் ஒன்றும் இல்லை என்பதால் இவர் அதை கண்டு கொள்ளாமல் காரை எடுத்துக் கொண்டு தனது கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

கல் வீச்சு

ஆர்.கே. பேட்டை- திருத்தணி நெடுஞ்சாலையில் வேலன் கண்டிகை என்ற இடத்தில் அவர் காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது சில மர்ம ஆசாமிகள் சாலையில் நின்று கொண்டு இவரது காரை வழி மறித்தனர். அதிர்ச்சி அடைந்த அனுமன் குமார் காரை நிறுத்தாமல் ஓட்டினார். இதனால் அந்த மர்ம ஆசாமிகள் கற்களை வீசினர். இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

இது குறித்து அனுமன் குமார் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் மீது கல் வீசி தாக்கியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்