மயிலாப்பூர் கோவில் சிலை மாயமான வழக்கு; 4 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-22 12:42 GMT

சென்னை,

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்ற போது, புன்னைவனநாதர் சன்னதியில் இருந்து மயில் சிலை மாயமானது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் அப்போதைய கூடுதல் ஆணையர் திருமகள், சபரி முத்தையா உள்ளிட்ட 7 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி திருமகள், சபரி முத்தையா ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கை பொறுத்தவரை ஏற்கனவே நடந்து வரும் விசாரணையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 4 மாதங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனஉத்தரவிட்டார். அவ்வாறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாவிட்டால், இந்த வழக்கு தன்னிச்சையாக ரத்தாகிவிடும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்