50 நாட்களாக குடிநீர் வராததால்ஆர்.டி.ஓ.அலுவலகம் முற்றுகை

Update: 2023-03-29 16:54 GMT


பூலாங்கிணறு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 50 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளறுபடி

உடுமலை ஒன்றியம் பூலாங்கிணறு ஊராட்சிக்குட்பட்ட பூலாங்கிணறு, மில் கேட், கென்னடிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.இதுதவிர ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 50 நாட்களாக இந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

குடிநீர் வடிகால் வாரியத்தின் குளறுபடிகளால் தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்வதாக தெரிவித்ததால் ஒவ்வொரு முறையும் போராட்டத்தை கைவிட்டோம்.பின்னர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கொடுத்த வாக்குறுதிகளையும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காப்பாற்றவில்லை. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை முக்கோணம் பகுதியில் தேசிய நேடுஞ்சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். காலையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு பேச்சுவார்தைக்கு வரச் சொன்னார்கள். காலை 9 மணிக்கு வந்து விட்டோம்.

புதிய குடிநீர்த் திட்டம்

பேச்சுவார்த்தையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகத்தில் குளறுபடி வரக்கூடாது என்று ஆர்.டி.ஓ. உறுதியாகத் தெரிவித்து விட்டார். அதனையடுத்து திருமூர்த்திமலை நீரேற்று நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்து வருவதாகச் சென்ற அதிகாரிகள் மாலை 4 மணியாகியும் வரவில்லை. அதனால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பூலாங்கிணறு ஊராட்சிக்கு பூலாங்கிணறு, கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 47 ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.80 கோடியில் புதிய குடிநீர்த்திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய குடிநீர்த் திட்டத்தில் வழக்கமாக வழங்கப்பட்ட அளவை விட 2 லட்சம் லிட்டர் குடிநீர் குறைவாக வழங்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். வழக்கமான அளவை விட குறைவாக வழங்குவதற்கு எதற்கு புதிய திட்டம்? எதற்காக இத்தனை கோடி செலவு செய்ய வேண்டும் என்பது புரியவில்லை. எனவே மக்கள் தொகையே அதிகரிப்புக்கேற்ப வழக்கமான அளவை விட கூடுதலாக வழங்காவிட்டால், அதே அளவு குடிநீராவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர். இதனையடுத்து இரவு 7 மணியளவில் திரும்பி வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒருசில ஊராட்சிகள் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக குடிநீர் எடுப்பதால் தான் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே 4 நாட்களுக்குள் முழுமையான அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சுமார் 13 மணி நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்