ஊரக வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் அவினாசியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வேலை திட்டம்
ஊரக வேலைத் திட்டத்தினை முறையாக செயல்படுத்தக் கோரியும், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்த வேண்டும். தினக்கூலி மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்கள் காலை 7 மணிக்கு பணியிடத்திற்கு வருவதை கைவிட வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையாக வேலை நாட்கள் அளிக்க வேண்டும்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை வேறு கட்டுமானப்பணிகளுக்காக பயன்படுத்தி வேலைவாய்ப்பை பறிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய நிர்வாகி மல்லப்பன், முருகேஷ், விவசாய சங்க மாவட்ட நிர்வாகி வெங்கடாசலம், விவசாய சங்க ஒன்றிய நிர்வாகி முத்து ரத்தினம், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி, சி.ஐ.டி.யு. ஒன்றிய நிர்வாகிகள் ராஜ், வேலுச்சாமி, ஆப்பரேட்டர் சங்க மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.