திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு முட்டை கோஸ் வரத்து அதிகரித்துள்ளது. இவை விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன.
விலை சரிவு
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு காய்கறிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களாக முட்டைகோஸ் வரத்து அதிகமாக உள்ளது. பெரும்பாலும் தாளவாடி, மைசூர் ஆகிய இடங்களிலிருந்து இங்கு முட்டைகோஸ் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக சுமார் 400 மூட்டைகள் இங்கு வரப்படும் நிலையில் தற்போது சுமார் 700 மூடை முட்டைகோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ளதால் இதன் விலையும் அடியோடு சரிந்துள்ளது. 45 முதல் 50 கிலோ வரைக்கும் எடை கொண்ட ஒரு மூட்டை முட்டைகோசானது தற்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நன்கு தரமான மூட்டை மட்டும் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முட்டைகோசிற்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது பெருமளவிற்கு விலை குறைந்திருப்பது வியாபாரிகளையும், விவசாயிகளையும் கவலையடைய செய்துள்ளது.
முட்டை கோஸ் தேக்கம்
இதன் விலை குறைந்திருந்தாலும் வியாபாரிகள் எதிர்பார்க்கும் அளவிற்கு விற்பனை நடைபெறாமல் உள்ளது. இதனால் மார்க்கெட்டில் முட்டை கோஸ் மூட்டை, மூட்டையாக தேக்கமடைந்துள்ளது. சராசரியாக ஒரு முட்டை கோஸ் மூட்டையானது ரூ.400 முதல் ரூ.500 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக ரூ.2ஆயிரத்தை தாண்டியும் ஒரு மூட்டை முட்டைகோஸ் விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் விலை எப்போது சீராகுமோ என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகளும், வியாபாரிகளும் காத்திருக்கின்றனர்.