முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முத்துமாரியம்மன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே மேலத்தானியத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கொட்டும் மழையில் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார்.
தேரோட்டம்
இதனையடுத்து மேள தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் மேலத்தானியம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
மஞ்சள் நீராட்டு விழா
இதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மேலத்தானியம் எட்டுப்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர்.