முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
பாச்சலூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பாச்சலூர் அருகே செம்பிரான்குளம் காலனியில் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 நாட்கள் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 3-ந்தேதி இரவு பெருவழி அரவு ஆற்றில் இருந்து அம்மன் கரகம் அலங்கரிக்கப்பட்டு கரகாட்டம், வாண வேடிக்கையுடன், மேள, தாளம் முழங்க கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்து, கிடா வெட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
மேலும் பாரம்பரிய உணவு கண்காட்சி நடந்தது. இதையடுத்து மாலையில் விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு மாலை 4 மணிக்கு மேள, தாளத்துடன் பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு வேடங்களுடன் மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.