முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

Update: 2023-02-02 17:12 GMT

தைப்பூச திருவிழா

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடிகொண்ட பழனி, அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது தனிச்சிறப்பு ஆகும்.

ஏனெனில், தமிழகத்தில் மற்ற கோவில்களை காட்டிலும் பழனியில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

இதில் பல பக்தர்கள் அலகு குத்தியும், மயில் காவடி, பால்காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடியை தூக்கி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதன்படி விழா தொடங்கியது முதலே, பழனிக்கு வருதை தரும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

திருக்கல்யாணம்,  தேரோட்டம்

10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடு நடைபெறுகிறது.

நாளை (சனிக்கிழமை) தைப்பூச நாளன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முருகனை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

சாரை, சாரையாக பக்தர்கள்

குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, உடுமலை சாலைகளில் வழிநெடுகிலும் பக்தர்கள் சாரை சாரையாக வருகிறார்கள். இவ்வாறு வருகிற பக்தர்கள் முருகனை நினைத்து பாட்டு பாடியும், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியும் வருகின்றனர். பழனிக்கு வந்ததும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதி ஆகியவற்றில் புனித நீராடுகின்றனர். தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி, மலைக்கோவில் சென்று வழிபடுகின்றனர்.

காவடி ஆட்டம்

இந்நிலையில் காரைக்குடி, சிவகங்கை பகுதியை சேர்ந்த புகழ்பெற்ற நகரத்தார் காவடிகுழுவினர் நேற்று காலை ஒட்டன்சத்திரம் வந்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அங்கிருந்து பழனி நோக்கி புறப்பட்டனர்.

பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து வகை பக்தர்களும் காவடி தூக்கி, அலகு குத்தி கிரிவீதிகளில் வலம் வருகின்றனர்.

அப்போது மேள, தாளத்துக்கு ஏற்றவாறு ஆடுகின்றனர். இதை ஏராளமான பக்தர்கள் பார்த்து தங்கள் செல்போனில் புகைப்படம் எடுக்கின்றனர். பழனியில் தரிசனம் முடித்த பின்பு பஸ், ரெயில்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

சாரல்மழை

திண்டுக்கல் சாலை பகுதியில் வழிநெடுகிலும் பொதுமக்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவசமாக மோர், பழச்சாறு, இளநீர், அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். அதை வாங்கி சாப்பிட்டு மரத்தடியில் ஓய்வெடுத்து பின்பு பாதயாத்திரையை தொடங்குகின்றனர்.

இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இதனால் காலை, மாலையில் மட்டும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மதியவேளையிலும் நடந்து சென்றனர். இதற்கிடையே அவ்வப்போது சாரல் மழையும் பெய்ததால் ஆனந்தம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்