முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

கூடலூர் அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-02-24 18:45 GMT

கூடலூர்

கூடலூர் அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால்குடம், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேர்த்திருவிழா

கூடலூர் அருகே சளிவயல் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன், சித்தி விநாயகர், பாலமுருகன் கோவிலில் வருடாந்திர திருத்தேர்திருவிழா, கடந்த 22-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் காலை 9 மணிக்கு கொடி ஏற்றுதலும், 11 மணிக்கு புத்து அம்மனுக்கு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது.

இதையடுத்து இரவு 9 மணிக்கு தாணிமட்டம் ஆற்றங்கரையில் இருந்து கரகம் பாலித்து ஊர்வலமாக கோவிலுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் 23-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு புனித நீர் அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஆற்றங்கரையில் இருந்து முத்துமாரி அம்மனுக்கு மா விளக்கு பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.

பால்குட ஊர்வலம்

இந்த நிலையில் நேற்று மதியம 12 மணிக்கு ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, பறவை காவடி எடுத்து மேள-தாளங்கள் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு விளக்கு பூஜையும், தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தும் பூஜையும், மாலை 3 மணிக்கு பெண் பக்தர்களின் ஊர்வலமும், இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் சித்தி விநாயகர், முத்து மாரியம்மன், பாலமுருகன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் கரகம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆற்றங்கரையில் குடி விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்