தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்முத்தையாபுரம் பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்முத்தையாபுரம் பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு என்.டி.பி.எல். அனல்மின்நிலைய கிளை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு மாவட்ட பொருளாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, துணைத்தலைவர் முருகன், கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் மாரியப்பன் மற்றும் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர். அந்த மனுவில், மதுரையில் மண்டல தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கோரிக்கைளை விரைந்து அமல்படுத்த வேண்டும். அதன்படி தொழிற்சங்கத்தை அழைத்து பேச வேண்டும், ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறை சம்பளத்துடன் வழங்க வேண்டும், 20 நாட்கள் பணிபுரிந்தால் ஒருநாள் சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும், அனைவருக்கும் இ.பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும். இ.பி.எப். பிடித்தம் செய்யாத தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதி செய்து தர வேண்டும். இந்த கோரிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
செல்போன் கோபுரம்
முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெரு மக்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் பூமயில் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட முனியசாமி கோவில் தெரு, வடக்கு தெரு, பெரியார் தெரு, தோப்புத் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியார் இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள செல்போன் கோபுரத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். ஆகையால் அந்த செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும். அதனை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.