முத்தாலம்மன் கோவில் திருவிழா

கொடைரோடு அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-06-08 19:15 GMT

கொடைரோடு அருகே நரியூத்து, காட்டுநாயக்கன்பட்டியில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், பட்டாளம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்து கோவிலுக்கு வந்தனர். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் காளியம்மன், பகவதியம்மன் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ராஜகம்பளத்தார் சார்பில் தம்பூரான் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. அப்போது காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் தேவராட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெண்கள் கன்னிமார் தெய்வம் போன்று பாரம்பரிய நிகழ்ச்சியை நடத்தினர். இதில், 10 வயதுக்குட்பட்ட 3 பெண் குழந்தைகள் அம்மனுக்குரிய பொருட்களை சுமந்து வந்தனர். மேலும் முத்தாலம்மன், காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதிஉலா வந்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஊர்வலம் முடிந்தபிறகு அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார். முன்னதாக பட்டிமன்றம், நாடகம் நடைபெற்றது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திருவிழா நடைபெற்றது. இதனால் கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை காட்டுநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்