பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். செஞ்சிகோட்டையில் நடைபெற்ற தொழுகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார்

Update: 2023-04-22 18:45 GMT

விழுப்புரம்

ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகை ரமலான் மாத இறுதியில் (பிறை தெரிவதை கணக்கிட்டு) கொண்டாடப்படுகிறது. எனவே இஸ்லாமிய மாதங்களில் இந்த ரமலான் மாதம் புனிதமிக்க மாதமாக கருதப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகையை நேற்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள், அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகளை அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர். சிறுவர், சிறுமிகளும் விதவிதமான ஆடைகளை அணிந்தபடி தொழுகையில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்

செஞ்சி செட்டிப்பாளையம் கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், தி.மு.க. நகர செயலாளர் காஜா நஜீர், முன்னாள் கவுன்சிலர் சாதுல்லா மற்றும் அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதே போல் சொரத்தூர், மீனம்பூர், அப்பம்பட்டு, அனந்தபுரம், ஆலம்பூண்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் செஞ்சி பெரிய பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு செஞ்சி கூட்டு ரோட்டை வந்தடைந்தனர்.அங்கு செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் மஜித் பாபு பிறை கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருவண்ணாமலை சாலை வழியாக செஞ்சிக்கோட்டையில் உள்ள சாதுல்லா கான் மசூதியை வந்தடைந்தனர். அங்கு ஷமீம் அக்தர் சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் டாக்டர் சையத் சத்தார், கவுன்சிலர் ஜான் பாஷா, மாவட்ட பிரதிநிதி சர்தார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரிஸ்வான், முன்னாள் கவுன்சிலர்கள் சையத்பாபு, காஜாபாஷா, ரப்பானி அசு துல்லா, சையத் ஆதம், ஷிமார்ட் அஷ்ரப், சமியுல்லா, ஷரிப் உள்பட முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மந்தக்கரை யூமியா ஜாமி மஸ்ஜித் பள்ளிவாசல், பாகர்ஷா வீதி பாகர்ஷா மஸ்ஜித் பள்ளிவாசல், வண்டிமேடு மண்டி மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வடக்கு தெரு ஷெரீப் மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வாலாஜா மஸ்ஜித் பள்ளிவாசல், மருதூர் தக்வா மஸ்ஜித் பள்ளிவாசல், புதுச்சேரி சாலையில் உள்ள ரஹ்மான் மஸ்ஜித் பள்ளிவாசல் உள்பட விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், கீழ்பெரும்பாக்கத்தில் நடந்த சிறப்பு தொழுகையிலும் ஏராளமான முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு செல்போன்களில் வாட்ஸ்-அப், முகநூல் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவுகளை சமைத்து சாப்பிட்டதோடு உறவினர்கள், நண்பர்களுக்கும் அதனை கொடுத்து மகிழ்ந்தனர்.

அவலூர்பேட்டை

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை கடைவீதியில் உள்ள பள்ளி வாசலில் இருந்து மூஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு அருகில் உள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து முத்தவல்லி அர்ஷத், பட்டேல் காந்தி ஆகியோர் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக ஹஸரத் முகம்மது ஆதில் சொற்பொழிவாற்றினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இதேபோல் மேல்மலையனூர், வளத்தி, எதப்பட்டு, நீலாம்பூண்டி, பத்தியப்பேட்டை, சங்கிலிக்குப்பம் ஆகிய இடங்களிலும் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

திண்டிவனம்

ரம்ஜான் பண்டிகையையொட்டி திண்டிவனத்தில் முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக திண்டிவனம்-செஞ்சி சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து ஹாஜி அஜ்மல் அலி சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் திண்டிவனத்தில் உள்ள 13 பள்ளிவாசல்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். சிறப்பு தொழுகையையொட்டி திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபபட்டனர்.

மரக்காணம், கூனி மேடு, முறுக்கேரி, சிறுவாரி, வைடப்பாக்கம், வேப்பேரி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்