ஓசூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

ஊர்வலத்தின் போது பேரிகை இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2022-09-02 18:17 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வைத்து வழிபட்டனர். இந்த சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் மத நல்லிணக்க ஊர்வலமாக நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்களும், இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அப்போது பேரிகை இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையடுத்து விநாயகர் சிலைகள் அனைத்தும் மடிவாளம் ஏரியில் கரைக்கப்பட்டன. இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்