வயலூரில் முருகன் கோவில் தேரோட்டம்
வயலூரில் முருகன் கோவில் தேரோட்டம் நடந்தது.
சோமரசம்பேட்டை:
தேரோட்டம்
திருச்சி அருகே குமாரவயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி வீதி உலா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து 'அரோகரா' கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோவில் மாட வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.
நாளை தெப்ப உற்சவம்
தேரோட்டம் மற்றும் வைகாசி விசாக திருவிழாவிற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வைகாசி விசாகமான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது. பகல் 12 மணியளவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் மற்றும் அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
நாளை(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு 8 மணி அளவில் மின்விளக்கு அலங்காரம் மற்றும் பூ அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி ஆளும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.