வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்

நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்கக்கோரி வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2022-09-09 13:57 GMT

நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்கக்கோரி வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

வழக்கை விரைந்து முடிக்கக்கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய மனைவி நளினி தற்போது பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

பல ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று முருகன் ஜெயில் நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க முடியாது என்று ஜெயில் நிர்வாகம் மறுத்து விட்டது. அதனால் முருகன் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து விட்டு பரோல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் முருகன் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்கக்கோரி ஜெயிலில் திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். ஜெயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் உணவை அவர் ஏற்கவில்லை.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், பெண் காவலரை அவதூறாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை விரைந்து முடித்து, பரோல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளிக்கவில்லை. அவரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்