தொடர் உண்ணாவிரதத்தால் முருகன் 20 கிலோ எடை குறைந்துள்ளார்
வேலூர் மத்திய ஜெயிலில் பரோல் வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் 20 கிலோ எடை குறைந்துள்ளார் என்று அவரின் வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.
வேலூர் மத்திய ஜெயிலில் பரோல் வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் 20 கிலோ எடை குறைந்துள்ளார் என்று அவரின் வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.
முருகன் தொடர் உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் அவர் தனக்கு பரோல் வழங்கக்கோரி கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி ஜெயில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
ஜெயிலில் வழங்கப்படும் உணவுகளை தவிர்த்து பழங்களை மட்டுமே உட்கொண்டு வருகிறார். 31-வது நாளாக நேற்று தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அவரின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
20 கிலோ எடை குறைந்துள்ளார்
இந்த நிலையில் முருகனின் வக்கீல் புகழேந்தி நேற்று காலை 12 மணியளவில் வேலூர் ஜெயிலில் முருகனை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில், பரோல் வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அவரை கைத்தாங்கலாக ஜெயில் காவலர்கள் அழைத்து வந்தனர். கை, கால்கள் நடுக்கத்துடன் காணப்பட்டார்.
ஜெயில் அதிகாரிகள் முருகனின் உடல் எடையை காலையில் சோதனை செய்துள்ளனர். உண்ணாவிரதத்துக்கு முன்பு 63 எடை இருந்தவர் தற்போது 20 கிலோ எடை குறைந்து 43 கிலோ எடையுடன் இருப்பதாக தெரிவித்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல் எடை குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன் உள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு முருகனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.