வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர்

வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-11-21 16:00 GMT

வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 6 பேர் கடந்த 11-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதில் முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். முருகன் ஜெயிலில் இருந்தபோது 2020-ம் ஆண்டு அங்கு சோதனைக்கு வந்த பெண் போலீசாரிடம் அவதூறாக முருகன் நடந்ததாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கோர்ட்டில் ஆஜர்

இதற்காக திருச்சி உதவி கமிஷனர் சீதாராமன், இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகனை வேலூருக்கு பலத்த காவலுடன் அழைத்து வந்தனர்.

காலை 7.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட அவர்கள் வேலூருக்கு மதியம் 1.15 மணியளவில் வேலூர் வந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் கோர்ட்டில் முருகன் ஆஜர் படுத்தப்பட்டார்.

விசாரணைக்கு பின்னர் வழக்கை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு ரோஸ்கலா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மீண்டும் 6 மணி அளவில் திருச்சிக்கு போலீசார் முருகனை அழைத்துச் சென்றனர்.

நளினி சந்திப்பு

முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் விசாரணைக்காக காத்திருந்த முருகனை அவரது மனைவி நளினி சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசினர். விடுதலை தொடர்பாகவும் மற்றும் இந்த வழக்கு தொடர்பாகவும் பேசிக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்