தலையணையால் முகத்தில் அமுக்கி கணவன் கொலை: காதலன், தோழியுடன் ஆசிரியை சிறையில் அடைப்பு

தலையணையால் முகத்தில் அமுக்கி கணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காதலன், தோழியுடன் ஆசிரியை நிவேதா சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-07-28 20:45 GMT

மேச்சேரி:

என்ஜினீயர் கொலை

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் மலையம்பாளையத்தை சேர்ந்த அர்த்தநாரீசுவரர் மகன் சுந்தரராஜ் (வயது 32). என்ஜினீயரான இவருக்கும், சேலம் குகை பகுதியை சேர்ந்த நிவேதா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

சுந்தரராஜ்- நிவேதா இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர். சுந்தரராஜூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சொந்த ஊரான ஜலகண்டாபுரத்துக்கு வந்தனர். இதற்கிடையே சுந்தரராஜ் ெநசவு தொழிலுக்கு சென்றும், நிவேதா தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

கள்ளக்காதல்

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் பள்ளி தோழி வித்யா மூலம் நிவேதாவுக்கு அறிமுகம் ஆனார். அதன்பிறகு தினேசுக்கும், நிவேதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. 8 ஆண்டு திருமண வாழ்க்கையை விட 5 மாதத்தில் பழகிய கள்ளக்காதல் மோகம் நிவேதாவுக்கு பெரிதாக பட்டுள்ளது. எனவேதான் தன்னை கண்டித்த கணவரை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலன் தினேஷ், தோழி வித்யா உதவியை நாடியுள்ளார்.

வித்யா போட்டுக்கொடுத்த திட்டத்தின்படியே நிவேதாவும், தினேசும் சுந்தரராசுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, தூங்கும் போது முகத்தில் தலையணையால் அமுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக ஜலகண்டாபுரம் போலீசார் முதலில் தற்கொலை வழக்குப்பதிவு செய்து இருந்தனர். விசாரணைக்கு பிறகு கொலை செய்து விட்டு நிவேதா நாடகமாடியது தெரிய வந்தது. உடனே போலீசார் சுந்தரராஜ் சாவை கொலை வழக்காக மாற்றினர்.

பின்னர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதாக நிவேதா, அவருடைய கள்ளக்காதலன் தினேஷ், தோழி வித்யா ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் செய்திகள்