கொடைரோடு அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ டிரைவர் கைது

கொடைரோடு அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-02 17:29 GMT

கொடைரோடு அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாலிபர் பிணம்

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவுக்கும், பாண்டியராஜபுரத்திற்கும் இடையே சாலையோரம் முட்புதரில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியாமல் இருந்தது.

அடையாளம் தெரியாததால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த வாலிபரின் உடலில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. ஆனால் இந்த வழக்கு விசாரணை ஆமைவேகத்தில் நடந்து வந்தது.

ஆட்டோ டிரைவர்

இந்தநிலையில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோரின் அறிவுரையின்படி வழக்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், கண்ணாகாந்தி, தயாநிதி ஆகியோர் அடங்கிய 3 தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் 2 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியது. அதன்படி கொலை செய்யப்பட்ட வாலிபர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மகன் கருப்புசாமி என்ற பிரவீன்குமார் (வயது 25) என்பது தெரியவந்தது. இவர் உசிலம்பட்டியில் சலூன் கடை நடத்தி வந்த நிலையில், முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய அதே ஊரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மணிகண்டன் என்ற செட்டியார் மணி (35) என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குத்திக்கொலை

பிரவீன்குமாரும், அதே ஊரை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவரும் நண்பர்கள். பிரவீன்குமார், அலெக்ஸ்பாண்டியனின் சகோதரரான ஆனந்தகுமார் என்ற துப்பாக்கி ஆனந்த் (40) என்பவரிடம் தனது செல்போனை கொடுத்து ரூ.3 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கிடையே பிரவீன்குமாரின் உறவுக்கார பெண்ணிடம் ஆனந்தகுமார் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிரவீன்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பிவிட்டனர். இருப்பினும் பிரவீன்குமார் மீது ஆனந்தகுமார் ஆத்திரத்தில் இருந்தார். அவரை கொலை செய்யவும் ஆனந்தகுமார் முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி ஆனந்தகுமார், பிரவீன்குமாரை தொடர்பு கொண்டு, செல்போனை திருப்பி தருவதாக கூறினார். இதனை நம்பிய பிரவீன்குமார் ஆனந்தகுமாருடன் சென்றார். அப்போது அவரை அழைத்துக்கொண்டு ஆனந்தகுமார், தனது நண்பரான மணிகண்டனின் ஆட்டோவில் சென்றார். உடன் மற்றொரு நண்பரான சுந்தரபாண்டி என்பவரும் உடன் வந்தார்.

2 பேருக்கு வலைவீச்சு

இந்தநிலையில் அவர்கள், பிரவீன்குமாரை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, உடலை பள்ளப்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலை ஓரம் முட்புதரில் வீசிவிட்டு ஆனந்தகுமார் உள்பட 3 பேரும் தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆனந்தகுமார், சுந்தரபாண்டி ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்