ஓசூரில் பட்டப்பகலில் பயங்கரம்:ஜாமீனில் வந்த ரவுடி நடுரோட்டில் வெட்டிக்கொலைமோட்டார் சைக்கிள்களில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

Update: 2023-05-12 18:28 GMT

ஓசூர்:

ஓசூரில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அச்செட்டிப்பள்ளி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் திலக் (வயது 24). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை 11.30 மணி அளவில் ஓசூரில் ரெயில் நிலைய சாலை பெரியார் நகரில் பிரபல இனிப்பு கடை அருகே உள்ள டீக்கடைக்கு வந்தார். அங்கு அவர் டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் கடையில் டீ வாங்கி குடித்து கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து திலக்கை சரமாாரியாக வெட்டினர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க திலக் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் திலக்கை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

போலீசார் விசாரணை

பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலையை கண்டு பொதுமக்கள் பயத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதே நேரத்தில் திலக்கை கொலை செய்ததும் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து பொதுமக்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் கொலையுண்ட திலக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

பழிக்குப்பழி

ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் மோகன்பாபு (25). இவர் ஸ்ரீராம் சேனா (தமிழ்நாடு) என்ற அமைப்பின் ஓசூர் நகர செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும், திலக்கிற்கும் பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1.1.2022 அன்று மோகன் பாபுவை திலக் தரப்பினர் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இந்த வழக்கில் திலக் உள்பட 5 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்தனர். இதில் திலக் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இதை அறிந்த மோகன்பாபு ஆதரவாளர்கள் சிலர் திலக்கை நோட்டமிட்டு, அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மோகன்பாபு கொலை வழக்கில் திலக் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். மேலும் ரவுடி பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

தனிப்படை அமைப்பு

இந்த நிலையில் தான் திலக் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஓசூரில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஜாமீனில் வந்த ரவுடியை மர்ம கும்பல் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்