ஏரியூர் அருகே வனப்பகுதியில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூரக்கொலை-கள்ளக்காதல் காரணமா? போலீசார் விசாரணை
ஏரியூர்:
ஏரியூர் அருகே வனப்பகுதியில் தலையில் கல்லை போட்டும், மர்ம உறுப்பை அறுத்தும் தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தொழிலாளி கொடூரக்கொலை
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ளது சந்தைப்பேட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கவும், ஆடு மேய்க்கவும் செல்வது வழக்கம். அதன்படி நேற்று சிலர் வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றனர். அப்போது அங்கு தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக ஏரியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமும், சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கள்ளக்காதல்?
கொலை செய்யப்பட்ட நபர் 45 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் தலையில் கல்லை தூக்கி போட்டும், மர்ம உறுப்பை அறுத்தும் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல், நிர்வாண நிலையில் கிடந்தார். மேலும் அங்கு ரத்தக்கறைகள் காய்ந்த நிலையில் இருந்தன. இதனால் அவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதால் அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்டவர் தொழிலாளி என தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
தீவிர விசாரணை
கொலை செய்யப்பட்டவர் யார்? என தெரிந்தால் தான், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.