ஜேடர்பாளையம் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கொடூர கொலைஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

Update: 2023-03-12 19:00 GMT

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் கொலை

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாயி. இவருடைய மனைவி நித்யா (வயது 27). இவர்களுக்கு தனுஸ்ரீ (7), சுபஸ்ரீ (3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் நித்யா ஆடுகளை மேய்ப்பதற்காக கரப்பாளையம் பகுதியில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்தன.

இதனால் சந்தேகமடைந்த விவேகானந்தன் நித்யாவை தேடி கரப்பாளையம் ஓடைப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு கொலை செய்யப்பட்டு மேலாடைகள் கிழிந்து அலங்கோலமான நிலையில் நித்யாவின் பிணம் கிடந்தது. மனைவியின் உடலை கண்டு விவேகானந்தன் கதறி அழுதார்.

நித்யாவின் கழுத்து, கன்னம் உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. மேலும் இடது பக்க காதில் இருந்த தங்க கம்மல் காதில் இருந்து பறித்து எடுக்கப்பட்டிருந்தது.

சாலை மறியல்

இதுகுறித்து விவேகானந்தன் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்களிடம் தெரிவிக்காமல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையொட்டி நித்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நாமக்கல்- மோகனூர் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் நித்யாவின் கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும். கரப்பாளையம் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட நித்யாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக நாமக்கல்-மோகனூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த கொலை குறித்து போலீசார் கூறியதாவது:-

தினந்தோறும் நித்யா ஆடுகள் மேய்க்க வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகையை பறிக்க கொலை செய்திருக்கலாம். அப்போது நித்யா சத்தம் போட்டு விடக்கூடாது என்பதற்காக வாயை பொத்தி இந்த கொடூர செயலை செய்துள்ளனர். எனினும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்