கீழானூர் வனப்பகுதியில் பெண் மர்மசாவு: இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற கள்ளக்காதலன் கைது-வேறொரு நபருடன் பழகியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்

Update: 2023-01-03 18:45 GMT

அரூர்:

கீழானூர் வனப்பகுதியில் பெண் மர்மமாக இறந்து கிடந்த சம்பவத்தில், அவர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. வேறொரு நபருடன் பழகியதால் அவரை கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

பெண் பிணம்

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கீழானூர் வனப்பகுதியில் கடந்த மாதம் 31-ந் தேதி உடல் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. இதுகுறித்து மொரப்பூர் வனத்துறையினர் கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, அதனை ஆய்வுசெய்தனர்.

அடித்துக்கொலை

அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும், பெண்ணும் வனப்பகுதிக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மோட்டார் சைக்கிளில் சென்றது வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சக்திவேல் (வயது 42) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் பிணமாக கிடந்தது சித்தேரி ஊராட்சி ஊமத்தியை சேர்ந்த பார்வதி (33) என்பதும், அவரை சக்திவேல் அடித்துக்கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும் சக்திவேல் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கள்ளக்காதல்

ஊமத்தியை சேர்ந்த பார்வதியின் கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரின் மகன் மற்றும் மகள் அரூரில் உள்ள அரசு பள்ளியில், விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். பார்வதி கீரைப்பட்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது வேலைக்கு சென்ற இடத்தில் எனக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனால் நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்தநிலையில் பார்வதிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை நான் கண்டித்தேன். ஆனால் பார்வதி என்னை பொருட்படுத்தவில்லை.

கைது

சம்பவத்தன்று நான், பார்வதியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு கீழானூர் வனப்பகுதிக்கு சென்றேன். அங்கு தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதையடுத்து பார்வதியை வேறு யாருடனும் பழக கூடாது என்று எச்சரித்தேன். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த இரும்பு கம்பியால் பார்வதியை அடித்துக்கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். ஆனால் போலீசாரின் கழுகு பார்வைக்கு என்னால் தப்ப முடியவில்லை. இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

பெண் மர்மசாவு வழக்கில் அவரை அடித்துக்கொலை செய்ததாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்