டிரைவர் சாவில் திடீர் திருப்பம்: மனைவி குறித்து தவறாக பேசியதால் தலையில் கல்லை போட்டு கொன்றேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
டிரைவர் சாவில் திடீர் திருப்பம்: மனைவி குறித்து தவறாக பேசியதால் தலையில் கல்லை போட்டு கொன்றேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
சூளகிரி:
பேரிகை அருகே வேன் டிரைவர் சாவில் திடீர் திருப்பமாக தனது மனைவி குறித்து தவறாக பேசியதால் தலையில் கல்லை போட்டு கொன்றதாக கைது செய்யப்பட்ட வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேன் டிரைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகம் பக்கமுள்ள முக்காலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய மகன் நாகேஷ் (வயது 35). வேன் டிரைவர். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நாகேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது கணவரை காணவில்லை என்று மனைவி முனிலட்சுமி கடந்த 11-ந் தேதி பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தனிப்படைகள்
அதன்பேரில் போலீசார் நாகேசை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அத்திமுகத்தில் உள்ள ஒரு தாபா ஓட்டல் பின்புறம் நாகேசின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் நாகேசின் கழுத்து எலும்பு உடைக்கபட்டிருப்பது தெரியவந்தது. இதன்படி அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து மர்ம நபர்களை பிடிக்க ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், வினோத் மற்றும் கணேஷ் பாபு ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வாக்குமூலம்
இந்த நிலையில் நாகேசை கொலை செய்ததாக நரசிபுரத்தை சேர்ந்த நாகராஜ் மகன் லோகேஷ் குமார் (26) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:- நாகேஷ் எனது உறவினர் ஆவார். இந்த நிலையில் சம்பவத்தன்று நானும், நாகேசும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தோம். அப்போது போதையில் நாகேஷ் எனது மனைவி குறித்து தவறாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அப்போது போதையில் அங்கு கிடந்த கல்லை எடுத்து நாகேஷ் தலையில் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து லோகேஷ் குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.