தர்மபுரி அருகே விவசாயி கழுத்தை அறுத்து கொலை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய பயங்கரம்
தர்மபுரி அருகே விவசாயி கழுத்தை அறுத்து கொலை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய பயங்கரம்
தர்மபுரி அருகே விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கூலிப்படையை ஏவி இந்த பயங்கர கொலை நடந்துள்ளது.
கழுத்தை அறுத்து கொலை
தர்மபுரி மாவட்டம் மாவடிப்பட்டி தெற்கத்தியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 52). விவசாயி. வீட்டில் இருந்து வெளியே சென்ற முனியப்பன் தெற்கத்தியான் கொட்டாய்- வகுத்துப்பட்டி சாலையையொட்டி உள்ள பள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த அவருடைய 2-வது மனைவி பிரியா மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது முனியப்பன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
அந்த பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனிப்படை அமைப்பு
அதாவது முனியப்பன் கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கொலை நடந்ததை மறைப்பதற்காக கார் மோதி விபத்தில் பலியானது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
முனியப்பனுக்கு ஏற்கனவே திருமணமாகி சந்திரா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
2-வது திருமணம்
இந்த நிலையில் முனியப்பன், பிரியா (37) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முதல் மனைவி சந்திரா தனது மகள்கள் மற்றும் மகனுடன் தர்மபுரி அருகே வசித்து வந்தார். இந்தநிலையில் சந்திராவின் மகன் திருமலை, தந்தை முனியப்பனிடம் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில்தான் முனியப்பன் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே முதல் மனைவியின் மகனுக்கு தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கூலிப்படையை ஏவி விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.